×

திருமுல்லைவாயலில் பராமரிப்பு இல்லாத தகன மேடை: சடலங்களை எரிப்பதில் சிரமம்

ஆவடி, மார்ச் 13: ஆவடி திருமுல்லைவாயலில் உள்ள எரிவாயு தகனமேடை பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. இதனால் சடலங்களை எரிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலையில் எரிவாயு தகன மேடை உள்ளது. இந்த தகனமேடை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆவடி நகராட்சி நிர்வாகத்தால் சுமார் ₹2 கோடி செலவில் கலைநயத்துடன் அமைக்கப்பட்டது. இங்கு கழிவறை, மின்விளக்கு, குடிநீர், பூங்கா உள்ளிட்ட அனைத்து வசதிகள் செய்யப்பட்டது. இதனை திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தகனமேடை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சரிவர பராமரிப்பின்றி கிடக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘திருமுல்லைவாயல் எரிவாயு தகனமேடை வளாகத்தை சுற்றியுள்ள மின்விளக்குகள் எரிவது இல்லை.

இதனால் வளாகம் முழுவதும்  இரவில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனை அடுத்து சடலங்களை எடுத்து வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். இங்குள்ள பூங்கா பராமரிப்பின்றி கிடக்கிறது.  தகனமேடை சுற்றி முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன.  இதில் பாம்புகள், விஷ பூச்சிகள் நடமாடுகின்றன. இதனால் சடலங்களை பொதுமக்கள் எரியூட்ட அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும், சடலங்களை எடுத்து வரும் பாடை, மாலை உள்ளிட்ட பொருட்களை வளாகத்தில் ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.  இதனை துப்புரவு ஊழியர்கள் அப்புறப்படுத்துவது இல்லை. அதோடு மட்டுமல்லாமல், வளாகத்திலுள்ள தரையில் அலங்கார கற்கள் உடைந்து கிடக்கின்றன. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர்.  இங்குள்ள கழிவறையும் பயனின்றி கிடக்கிறது.

வெளியே கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் ஆங்காங்கே சிறுநீர் கழிக்கின்றனர். இறுதி சடங்கு முடித்துவிட்டு குளிப்பதற்கு தண்ணீர் வசதி இன்றி அவதிப்படுகின்றனர். ஒரே நேரத்தில் 2 சடலங்களை எரிக்க கூடிய வசதி உள்ளது. ஆனாலும், ஒரு எரிவாயு தகனமேடை மட்டும் செயல்படுகிறது. மற்றொரு  தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள புகைப்பான் சரிவர வேலை செய்யவில்லை. இதனால், சடலங்களை எரிக்கும் போது வெளியேறும் புகை செல்லமுடியவில்லை. இந்த புகை வெளியேறி அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு பிணவாடை வீசுகிறது.

கட்டி முடிக்கப்பட்ட பிறகு,  தகன மேடை கட்டிடமும் சீரமைக்கப்படாமலேயே உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, இனியாவது தகனமேடையை முறையாக பராமரிக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Tirumala Galli ,
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...